குழந்தை வரம் கொடுக்கும் நவநாத சித்தர்

கடவுளை யாரும் நேரடியாக பார்க்க முடியாது. அதனால். நமது கோரிக்கைகளை கடவுளை அடைய  ஒரு கருவியாக இருப்பவர்கள்தான் சித்தர்கள். இன்னும் சொல்லப் போனால், கடவுளிடம் கேட்பதை, சித்தர்களே முன்வந்து நமக்கு அளிப்பார்கள் என்பது அசைக்கமுடியாத நம்பிக்கை.
அதனால்தான், கோவில்கோவிலாக செல்பவர்கள்கூட, சித்தர்கள் ஜீவசமாதி உள்ள கோவில்களுக்கு தரிசனம் செய்கிறார்கள்.
இந்தியாவில்  மட்டுமல்ல இலங்கையிலும் சித்தர்கள் வாழ்ந்துள்ளார்கள் என்பது பலர் அறியாத உண்மை.

ஈழத்தின் நான்கு திசைகளிலும், நான்கு பெரும் சித்த சமாதிக் கோவில்கள் இருக்கின்றன. வடக்கே யாழ்ப்பாணத்தில் கடையிற் சுவாமிகள் சமாதியும், கிழக்கே காரைதீவில் சித்தானைக் குட்டி சுவாமிகள் சமாதியும், மேற்கே கொழும்பு முகத்துவாரத்தில் பெரியானைக் குட்டி சுவாமிகளின் சமாதியும், தெற்கே நாவலப்பிட்டியில் நவநாத சித்தர் சமாதியும் விளங்குகின்றன.
நாவலப்பிட்டி நகரில் இருந்து 19 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ள சிற்றூர் தான் குயின்ஸ் பெரி. இங்கு தான் நவநாத சித்தர் ஆலயம் அமைந்துள்ளது.
ஒரே நேரத்தில் ஒன்பது இடத்தில் இருக்கும் வல்லமைக் கொண்ட நவநாத சித்தரின் இலங்கை வருகை முற்றிலும் சுவாரஸ்யமானது. நாவலப்பிட்டி குயின்ஸ்பெரி தோட்ட பெரியக் கங்காணி இந்தியாவில் இருந்து வருகை தந்தவர். அவரும் அவர் மனைவியும் இந்தியாவில் இருந்து இலங்கை வரும் போது நவநாத சித்தர் கங்காணியின் மனைவியிடம் எங்கே செல்கிறீர்கள் என வினவியுள்ளார், தாங்கள் இலங்கைக்கு செல்வதாக அவர் கூறியதும் தானும் அவர்களுடன் வர புறப்பட்டாராம் நவநாத சித்தர்.
ஆனால் கங்காணியின் மனைவி தாங்கள் மலைநாட்டுக்கு செல்வதாகவும் அதிக குளிர், மழை நிறைந்த இடம் என்று கூறி
நீங்கள் அங்கு வந்து காலநிலையை சமாளிக்க மாட்டீர்கள் என அவரை அங்கேயே விட்டுவிட்டு வந்து
விட்டார்கள்.  ஆனால் அவர்கள் தலைமன்னார் வந்தடைந்த
வேளையில் நவநாத சித்தரும் தலைமன்னாரை வந்திருப்பதை பார்த்து வியந்து போயுள்ளனர் கங்காணி குடும்பத்தார்.
இவர்களுடன் குயின்ஸ்பெரி தோட்டத்தை நோக்கி தனது பயணத்தை ஆரம்பித்தார் நவநாத சித்தர். அங்கே சென்று வனாந்தரத்தில் கற்குகை ஒன்றில் தங்கியிருந்து தவம் செய்தார். அவர் தங்கியிருந்த குகை அருகே
தேயிலை மலைக்கு
வேலைக்கு செல்லும் பெண்கள் தங்களின் குழந்தைகளை விளையாட விட்டு செல்வது வழக்கமாம். அப்படி குழந்தைகளை விட்டுச் சென்றபோது அதில் ஒரு குழந்தை அவரை பார்த்து வரைந்ததாகவும் அங்குள்ள மக்கள் சொல்கிறார்கள். இன்றுவரை அந்த நிழற்படம் இவ் ஆலயத்தில் இருப்பதுடன் நவநாத சித்தர் இப்படித்தான் இருந்திருப்பார் என்பதையும் இன்றைய தலைமுறையினர் தெரிந்துகொள்ள உதவியாகவும் உள்ளதாக சொல்கிறார்கள்.
நவநாத சித்தருக்கு குயின்ஸ்பெரி தோட்டத்தார் உணவு வழங்குவதை வழக்கமாக கொண்டிருந்தார்கள்.
இப்படி உணவு வழங்கும் போது ஒரு முறை தோட்ட கங்காணி ஒருவரின் வீட்டில் மாமிசம் சமைத்தமையால் அவருக்கு சைவ உணவு வழங்கவேண்டும் என்பதற்காக கோவா கீரையுடன் சாதம் கொடுத்துள்ளனர் உண்ணும் உணவில் கை வைத்ததுமே சித்தர்
வேறொன்றும் இல்லையா என கேட்க வீட்டுக்காரர்கள் இல்லை
சித்தரே நீங்கள் சைவம் என்பதால் தான் இவ்வாறு உணவு வழங்கினோம் எனக் கூறி மாமிசத்தை எடுக்க சமையலறைக்கு சென்றதும் அந்த இடத்தில் இருந்து சித்தர் கிளம்பிவிட்டாராம். அவர் கை வைத்த அன்னம் நீண்டகாலம் பாதுகாக்கப்பட்டு வந்ததாக சொல்லப்படுகிறது.
வருடாந்தம் மார்கழி மாதம் வரும் திருவாதிரையன்று சித்தர் சமாதி
அடைந்த தினத்தில் விசேட பூஜை இடம்பெறுவதோடு தை மாதத்தில் வனபோசன நிகழ்வு நடைபெறுகிறது.
இந்த வனபோசன நிகழ்வு மிகப் பிரசித்தமானது. வழிபாடு செய்து இந்த வனபோசனத்தில் கொடுக்கப்படும். உணவை உண்டால் குழந்தைப்பாக்கியம் கிடைக்கும் என்பது பலரது நம்பிக்கை,
பலர் குழந்தைப்பேறு இன்றி நவநாதசித்தரை தரிசித்தமையால் அவரின் அனுக்கிரகத்தால் குழந்தைப்பேறு பெற்றுள்ளதாக தோட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.
நவநாத சித்தர் சமாதி அடைந்த இடத்தில் ஒரு லிங்கம் தானாகவே தோன்றியதாகவும் அந்த லிங்கம் இன்றுவரை வளர்ந்து வருவதாகவும் மக்கள் நம்புகிறார்கள்.

Comments

Popular posts from this blog

145 சித்தர்கள்

#2 மஹா சித்தர்கள்

பலப்ப்பல 18 சித்தர்கள்